![HARYANA](http://image.nakkheeran.in/cdn/farfuture/S8ZNP8i2OVZwq8HkXBEeEC1nQusCCMuODeEVdyIbORk/1615384271/sites/default/files/inline-images/DASS.jpg)
ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 40 பேர் பாஜகவையும், 30 பேர் காங்கிரசையும் சேர்ந்தவர்கள். இதுமட்டுமின்றி சட்டமன்றத்தில் பாஜகவோடு கூட்டணியில் உள்ள ஜன்னாயக் ஜந்தா கட்சிக்கு 10 பேர் உள்ளனர். இவர்களை தவிர்த்து ஹரியானா லோகித் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், ஏழு சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட 6 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக, 30 காங்கிரஸ் உறுப்பினர்களும், 2 சுயேட்சைகளும் வாக்களித்தனர். அதேநேரம், இந்த தீர்மானத்திற்கு எதிராக 55 பேர் வாக்களித்தனர். பாஜக உறுப்பினர்கள் 39 பேரும் (சபாநாயகரை தவிர்த்து), ஜன்னாயக் ஜந்தா கட்சியினர் 10 பேரும், ஐந்து சுயேட்சைகளும், ஹரியானா லோகித் கட்சியின் ஒரு உறுப்பினரும் பாஜகவிற்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து காங்கிரஸின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.