மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் ஆறு அமைச்சர்கள் உட்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வரும் சூழலில், எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரான லக்ஷ்மன் சிங் தெரிவித்துள்ளார்.
![Congress leader Laxman Singh about mp political crisis](http://image.nakkheeran.in/cdn/farfuture/oKR67xZePhnWKeK1cw3eW2ircZR0ct5ghA3tomwAIuQ/1583832304/sites/default/files/inline-images/zdsvDSgvs.jpg)
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். இன்று காலை பிரதமர் மோடியைச் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ க்கள் 19 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரான லக்ஷ்மன் சிங், "நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நாங்கள் இதுகுறித்து முதல்வரை சந்தித்து விவாதிக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.