'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக பீகார், ஒடிஷா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் (16/06/2022) தொடங்கிய போராட்டம், தற்போது தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடந்த 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை வாரங்கல்லுக்கு செல்லும் வழியில் சுங்கச்சாவடியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அக்னிபத் தொடர்பான போராட்டத்தில் செகந்திராபாத்தில் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி செல்ல முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.