இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் - டீசல் விலை தினசரி உயர்ந்துவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்பிறகு சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிதாக மாற்றமில்லாமல் இருந்துவந்தது. இந்தநிலையில், தற்போது மீண்டும் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இந்த விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததே காரணம் என ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கமளித்திருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, ஜூன் 11ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இந்த நாடு தழுவிய போராட்டத்தில், பெட்ரோல் பங்க்குகளின் முன்பு அடையாள ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அண்மையில் இந்தியாவில் சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியது குறிப்பிடத்தக்கது.