இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்துவருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி விதிமுறையை மீறி தள்ளுவண்டியில் காய்கறி விற்ற பெண்மணி ஒருவரிடமிருந்து மாநகராட்சி ஊழியர் காய்கறிகளைப் பறிமுதல் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்த அந்த ஊழியர் காய்கறி விற்ற பெண்ணின் மகன் ஆவார். இதுதொடர்பாக காய்கறிகளைப் பறிமுதல் நகராட்சி ஊழியர் சேக் கூறியதாவது, "நான் அம்மாவிடம் பலமுறை கூறியுள்ளேன். ஒரு இடத்தில் நின்று வியாபாரம் செய்யக்கூடாது, அதற்கு அரசு தடை விதித்துள்ளது என்று. ஆனால் அம்மா அதையும் மீறி தள்ளுவண்டியை நிறுத்தி தொடர்ந்து வியாபாரம் செய்துவந்தார். அதனால் நாங்கள் அவற்றை தற்போது பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.