இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 21 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 13 அனல் மின் நிலையங்களிலும், பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல் மின் நிலையங்களிலும், கேரளா மாநிலத்தில் 4 அனல் மின் நிலையங்களிலும், குஜராத் மாநிலத்தில் 1 அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் டாடா பவர் நிறுவனத்தில் மின் உற்பத்திப் பாதிப்பால் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானாவில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இதனிடையே நிலக்கரி பற்றாக்குறை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "நிலைமை மோசமாக உள்ளது மற்றும் பல முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர். நிலைமையை மேம்படுத்த நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.