1924 ஆம் ஆண்டு நடைபெற்ற 39வது காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி பெலகாவியில் மாநாடு நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த மாநாட்டி ந் ஒரு பகுதியாக, ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு மாநாடு நேற்று (21-01-25) கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் நடந்தது. இந்த மாநாட்டில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரியங்கா காந்தி, “அரசியலமைப்பிற்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் ஏற்கனவே கூறியுள்ளார். கட்சித் தொண்டர்களும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். ராகுல் காந்தியை கண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அஞ்சுகிறது. அவர் உண்மையைப் பேசும்போதும், அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக அவர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்போதும் தடைகளை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அது அவர் உண்மையைப் பேசுவதைத் தடுக்கவில்லை. நாங்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போல கோழைகள் அல்ல, உண்மைக்காக இயக்கம் உருவாக்கியுள்ளோம். நாங்கள் தியாகிகளாக எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். சிறைச்சாலையின் நான்கு சுவர்களில் இருந்து அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதங்களை ஒருபோதும் எழுத மாட்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் உட்பட பல அரசாங்கங்கள் மத்தியில் அமைக்கப்பட்டன. ஆனால் உள்துறை அமைச்சர்கள் யாரும் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரை அவமதிக்க முயற்சிக்கவில்லை. இருப்பினும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை அவமதித்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று வெளிப்படையாக அறிக்கைகளை வெளியிடுவதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை” என்று பேசினார்.