மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இரு பழங்குடியினப் பெண்கள் ஆடைகள் கலைக்கப்பட்டு, வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இது தொடர்பான வீடியோ கடந்த 19 ஆம் தேதி வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மே 3 ஆம் தேதி துவங்கி கலவரம் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் மோடி இந்த விஷயம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கலவரம் நடந்து 78 நாட்கள் கழித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளான ஜூலை 20 ஆம் தேதி பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர், “இந்த சம்பவம் எனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது. இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது” என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூரைப் பற்றி 78 நாட்களுக்குப் பிறகு வாய் திறந்த மோடி அரசியல் உள்நோக்கத்தோடு, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களைப் பற்றிப் பேசியுள்ளார் என்று விமர்சித்தனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களே பெண்களுக்கு எதிரான குற்றத்தில் முதலிடத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க-வுக்கு கசப்பான உண்மையாக இருந்தாலும் என்.சி.ஆர்.பி தரவுகளின்படி...
1. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், ஹரியானா, மத்திய காவல் துறையின் கீழ் இருக்கும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களே முதல் 5 இடத்தில் உள்ளன.
2. பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன.
3. கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் தான் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.
4. குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்றங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அதில் ராஜஸ்தான் 12வது இடத்தில் உள்ளது.
5. 2019 என்.சி.ஆர்.பி தரவுகளுடன் ஒப்பிடும்போது, 2021 என்.சி.ஆர்.பி தரவுகளின் அடிப்படையில், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5% குறைந்துள்ளது. அதேசமயம், பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
6. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை உலகமே பார்த்தது.
7. ஜோத்பூர் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளே ஏ.பி.வி.பி. நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள்தான்.
8. கட்டாயம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனும் சட்டம் இருக்கும் ராஜஸ்தானில் 2019-ஐ ஒப்பிடுகையில் 2021ல் 5% குற்றங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. ஆனால், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், உத்தரகாண்ட், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 17 மாநிலங்களில் குற்றங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. போலீஸும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. மணிப்பூர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப, மத்திய மற்றும் மாநில பாஜக தலைவர்கள் ராஜஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த அவதூறு முயற்சியை ராஜஸ்தான் சகித்துக் கொள்ளாது. ராஜஸ்தானியர்களை இழிவும், அவமானமும் செய்ய முயற்சிக்கும் பாஜகவிற்கு நேரம் வரும்போது ராஜஸ்தான் மாநில மக்கள் பதிலளிப்பார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.