இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சனை தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்த நிலையில், கடைசியாக இரு நாடுகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, இருநாடுகளும் விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதேநேரத்தில், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை ஏற்படுத்திவருகிறது. இதனைத்தொடர்ந்து இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், நவீன ஆயுதங்களையும் குவித்துள்ளது.
இந்நிலையில் சீன இராணுவம், இந்தியாவுடனான எல்லைப்பகுதியில், பெய்டோ எனும் சாட்டிலைட் மூலம் இயங்கும் தங்களது இடங்காட்டி அமைப்பின் செயல்பாட்டை திடீரென நிறுத்தியுள்ளது. இந்திய இராணுவம் தங்களது இயக்கத்தைக் கண்காணிக்கலாம் என்பதால் சீன இராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வடக்கு எல்லைப் பகுதியில் தங்களது முக்கிய நடவடிக்கைகளை மறைப்பதற்காக சீன இராணுவம் இடங்காட்டி அமைப்பின் பயன்பாட்டை நிறுத்தியிருக்கலாம் என கருதும் இந்திய இராணுவம், எல்லையில் தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.