உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். நேற்று காலை குஜராத் வந்த மோடி தாயின் இறுதி ஊர்வலத்திலும், உடல் தகனத்திலும் கலந்துகொண்டார். தாயாரின் இறுதிச்சடங்கை முடித்துக்கொண்ட கையோடு மேற்குவங்கத்தில் நடைபெற்ற வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஹவுரா-நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக குஜராத்திலிருந்தே பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இதே நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தொடர்ந்து பணியாற்ற உங்களுக்கு கடவுள் நல்ல பலத்தைக் கொடுக்க வேண்டும். தயவுசெய்து ஓய்வு எடுங்கள்.” என்றார்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய நிலையில், முதல்வர் மம்தா மேடை ஏற மறுத்துவிட்டார். ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ஆளுநர் முதல்வர் மம்தாவை சமாதானம் செய்ய முயன்ற நிலையில், அவர் மேடை ஏற மறுத்து பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.