புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், மத்திய அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி அடங்கிய 2 நபர் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், கூட்டாட்சி தத்துவத்தின் படி துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் (11/03/2020) தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பையடுத்து சமூக வலைத்தளங்களில் கருத்தை வெளியிட்டுள்ள கிரண்பேடி, 'சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மத்திய அரசு மற்றும் புதுவை நிர்வாகியின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாடாளுமன்றத்தின் மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் மற்றும் அதன் விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது. இதை நாம் அனைவரும் மதிக்கிறோம்.
பொதுமக்களின் நன்மைக்காக ஒருமைப்பாடு மற்றும் திட்டமிட்ட செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். புதுவை யூனியன் பிரதேசம் பல்வேறு விஷயங்களில் சிறந்த திறனை கொண்டுள்ளது. ஆளுநர் அலுவலகமும், அவரது குழுவும் சட்டத்துக்கு இணங்க பொதுமக்களின் நன்மைக்காக பணியாற்ற உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "156 பக்கமுள்ள அந்த தீர்ப்பின் கடைசி பக்கத்தில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியை மாநிலமாக கருத முடியாது என்ற கருத்து மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில கருத்துகளையும் நீதிபதிகள் சரியாக கூறியுள்ளனர்.
துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்று தான் செயல்பட வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்க தான் நிர்வாகத்திற்கு முழு பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம், யூனியன் பிரதேச சட்டத்தில் கூறியுள்ளபடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையை தாண்டி யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தனிப்பட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் ஏதும் இல்லை.
சட்டமன்றத்தில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்கள் தீர்ப்பு தான் பெரியது என கூறியிருப்பதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும். நியமிக்கப்பட்டவர்ளுக்கு இல்லை. சட்டசபையை மீறிய அதிகாரம் யாருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படி கொடுத்தால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இந்த நிலையில் அமைச்சர்களை அழைத்து கோப்புகள் பற்றி விசாரிப்பேன் என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. அமைச்சர்கள் ஆளுநர் வீட்டு வேலைக்காரர்கள் இல்லை. தன்னிச்சையாக செயல்பட்டு தர்பார் நடத்துவதையும் விட்டு விட வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும்.
முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக செயல்படுவது என தனியாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். இந்த வழக்கில் உச்சபட்சமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.
தீர்ப்பைப் பின்பற்றி அதனை மதித்து நடக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நிலையை தெரிவிப்பேன். அதன் படி நடந்து கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். நீதிமன்ற தீர்ப்பு முழுமையும் மக்களாட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.