Skip to main content

அசோக் கெலாட் வீட்டில் 107 எம்.எல்.ஏ க்கள்... ரெடியாகும் ரிசார்ட்..? ராஜஸ்தான் அரசியல் குழப்பம்...

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

Congress Legislative Party meeting details in rajasthan

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 107 எம்.எல்.ஏ க்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. யார் முதல்வர்? எனும் போட்டியில் வெற்றிபெற்று அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலிருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. வெளியில் தெரியாமல் உட்கட்சி பூசலாக இருந்த வந்த இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அம்மாநில முதல்வர் அசோக் கேலாட்டின் வீட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ க்கள் கலந்துகொண்டு அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் செயல் எட்டு கோடி ராஜஸ்தான் மக்களை அவமதிப்பதாகும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சந்திப்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது, மேலும் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஏகமானதாக ஆதரிக்கிறது. காங்கிரஸ் அரசு, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது எந்தவொரு சதித்திட்டத்திலும் ஈடுபடும் எந்தவொரு அலுவலக பொறுப்பாளர் அல்லது சட்டமன்ற கட்சியின் உறுப்பினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த சந்திப்பு வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்தபின் அங்கிருந்த 107 எம்.எல்.ஏ.க்களும் பேருந்துகளில் ஏற்றப்பட்ட அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்