நிலவுக்கு அருகே தகவல் தொடர்பை இழந்த 'விக்ரம் லேண்டரின்' இருப்பிடம் குறித்து கண்டறியப்பட்டது. இருந்த போதிலும் லேண்டரின் தகவல் தொடர்பு, இன்னும் கிடைக்கவில்லை என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் 'விக்ரம் லேண்டர்' கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். நிலவின் மேற்பரப்பில் லேண்டர் உள்ளதற்கான புகைப்படத்தை ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்து இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியுள்ளது.
லேண்டரின் தகவல் தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தரையிறங்க வேண்டிய 500 மீ தொலைவில் லேண்டர் உள்ளதாகவும், இதற்கான புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது நிலவுக்கு மேலே 2.1 கி.மீ தொலைவில் 'விக்ரம் லேண்டர்' தகவல் தொடர்பை இழந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் 14 நாட்களுக்கும் விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை பெற முயற்சிப்போம் என இஸ்ரோ தெரிவித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் தற்போது 'விக்ரம் லேண்டர்' கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.