இந்தியா சார்பில் சந்திரயான்-3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இஸ்ரோவின் திட்டப்படி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சந்திரயான்-3 நிலவில் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக 23ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 தரையிறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நேரத்தை இஸ்ரோ மாற்றி அறிவித்துள்ளது. புது அறிவிப்பின்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. சந்திரயான்-3 தரையிறங்கும் காட்சிகளை நேரடியாக நேரலையில் பார்ப்பதற்காக 23ம் தேதி மாலை 5 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சி நேரலை செய்ய இருக்கிறது. இஸ்ரோவுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான்-3 தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.