நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறு விறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்திய நாட்டின் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் முயற்சியில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது அணி அமைத்து தென்னிந்தியா சார்பில் பிரதமர் வர வேண்டும் என்ற முயற்சியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவெடுத்து நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு மித்த கருத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக திமுக தலைவரும் , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க சந்திரசேகர ராவ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் திமுக தலைமை தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர் உள்ளதால் சந்திக்க இயலாது என சந்திரசேகர ராவுக்கு திமுக தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க. ஸ்டாலின் ஏன் சந்திரசேகர ராவை சந்திக்க மறுப்பு தெரிவித்தார்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதி ஆன நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் . மு.க. ஸ்டாலின் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என அறிவித்தார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகள் ராகுல் பிரதமர் ஆவதை விரும்பவில்லை. இது குறித்து பேசிய மற்றக் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார் என்பதை அறிவிப்போம் என்றனர். இதனால் திமுகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் திமுக கட்சி ராகுல் காந்தி பிரதமர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அதில் உறுதியாக இருந்தது. இதன் காரணமாகவே மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர ராவை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆளும் கட்சியின் விமர்சனங்ககளில் இருந்தும் , கூட்டணிக் கட்சியில் ஏற்படும் சலசலப்பை தவிர்க்கவும் , இத்தகைய ராஜ தந்திர முடிவை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கலாம் என அரசியல் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.