உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாக கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்காக வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பதட்டமாகக் காணப்படும் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெரிய அளவிலான காட்டுத்தீ அம்மாநில மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை மாநிலத்தில் 46 காட்டுத்தீ சம்பவங்களால் 51.34 ஹெக்டேர் வனப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
இதில் குறிப்பாக அம்மாநிலத்தின் குமாவோன் பகுதியில் மட்டும் சுமார் 21 காட்டுத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், கர்வால் பகுதியில் 16 காட்டுத் தீ சம்பவங்களும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 9 காட்டுத்தீ சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு நாட்களாக அதிகரித்துவரும் இந்த காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், இந்த வனப்பகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த விலங்கு மற்றும் பறவையினங்களில் பாதியளவு இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.