ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு இணைந்து, ‘இந்தியாவில் 29 சட்டமன்றங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருக்கும் முதல்வர்கள் பற்றிய ஆய்வு’ என்ற தலைப்பிட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் முதல்வர்களின் சொத்து மதிப்பு, குற்ற வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த அறிக்கையின் படி இந்தியாவில் மொத்தமுள்ள முதல்வர்களில் 35% அல்லது 11 பேரின் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26% பேரின் மீது கொலை, கொலை முயற்சி, வளங்கள் அல்லது சொத்துகளை ஏமாற்றுவது, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.
மேலும், இந்த முதல்வர்களில் 25 பேர் அல்லது 81% பேர் கோடீஸ்வரர்கள் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். அருணாச்சலப்பிரதேசத்தின் பீமா கண்டு மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.
திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் ரூ.27 லட்சம் சொத்துகளுடன் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12ஆம் இடத்தில் இருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரூ.9.65 கோடி சொத்துகளைக் கொண்டிருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் அவரவர் வேட்புமனுக்களின் குறிப்பிட்டுள்ள விவரங்களேயாகும். இந்த விவரங்கள் அடுத்தடுத்த தேர்தல்களைப் பொருத்து மாறலாம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது.