பல்கலைக்கழக மானியக்குழு, இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக பட்டியல் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உபி மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து யூஜிசி நடத்திய ஆய்வில் நாட்டில் 24 போலி பல்கலைக்கழகம் செயல்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உபியில் 8 பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 7 பல்கலைக்கழகங்களும், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும் செயல்படுகின்றன. பீகார், கர்நாடகம், கேரளா, மகாராஷ்ட்டிரா , புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை போல பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.