![pm modi shah](http://image.nakkheeran.in/cdn/farfuture/NTOog4oGdT45uFwi4YIM6ZxGSfmRn_pTpc4JAmN5AXY/1624079821/sites/default/files/inline-images/a%20%2855%29.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இன்டர்நெட் சேவை படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. இந்தநிலையில், நேற்று (18.06.2021) ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதில் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 24ஆம் தேதி இந்த அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுமென்றும், சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவது என்பது சிறப்பு அந்தஸ்த்து நீக்கத்துக்குப் பிறகான மத்திய அரசின் முதல் பெரிய அரசியல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.