
புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து, ஆட்சியிலிருந்து அகற்றியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு சமமாகவே கருதுகிறேன்.
காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் கிரண்பேடியை துணைநிலை ஆளுநராக நியமித்த மத்திய பாஜக அரசு, அவர் மூலம் ஆட்சிக்குத் தொடர் தொல்லைக் கொடுத்து, செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தி, அத்தியாவசிய செலவினங்களுக்குக் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்தது. இவ்வளவு இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, முதல்வர் நாராயணசாமி தனது நிர்வாகத் திறமையால் மிகச்சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தார்.
கொல்லைப்புற அரசியலைத் தனது கொள்கையாகவும், குதிரை பேர அரசியலைத் தனது கோட்பாடாகவும் கொண்ட பாஜகவின் இந்தச் செயல், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்து தேர்வு செய்த வாக்காளர்களை முட்டாள்களாக்கும் செயலாகும். புதுச்சேரியில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கேலிக்கூத்துகள் நடக்காமல் தடுக்க, நியமன உறுப்பினர் என்ற முறையை ஒழித்துக்கட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு அளித்தப் பரிந்துரையின் அடிப்படையில் முழு மாநில தகுதியைப் புதுச்சேரிக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் " என்று வலியுறுத்தியிருக்கிறார்.