நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.
பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி பராஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து பீகார் மாநிலத்தில், உள்ள லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்டது. மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் அப்போது நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 39 இடங்களை வென்றது. இதில், பா.ஜ.க 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. மீதமுள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடந்த 2020ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, பசுபதி பராஸுக்கும், ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராஜ் பஸ்வானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் காரணமாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனை தொடர்ந்து, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை பசுபதி பராஸும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) என்ற கட்சியை சிராஸ் பஸ்வானும் தொடங்கினர்.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் சிராஜ் பஸ்வானுடன் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.க அறிவித்தது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட பா.ஜ.க ஒதுக்கீடு செய்யப்படாததால் பசுபதி குமார் பராஸ் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து, பசுபதி குமார் பராஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பீகார் மக்களவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 40 வேட்பாளர்கள் பட்டியில் நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. நான் மிகுந்த நேர்மையுடன் உழைத்தேன். எங்களுக்கும், எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.