புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (13/04/2020) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து 750 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 720 பேருக்கு கரோனா அறிகுறியில்லை. 30 பேருக்கான முடிவுகள் வரவேண்டி உள்ளது.
பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைகிறது. நமது அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. எனவே புதுச்சேரி மாநிலத்திலும் வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காலை 06.00 மணி முதல் பகல் 01.00 மணி வரை கடைகள் திறந்திருக்கும். தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கும் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும்.
விவசாயத் துறைக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்யலாம். உரக்கடைகள் திறந்திருக்கலாம். தானியக் கடைகள் திறந்திருக்கலாம். விவசாயிகள் தங்களது பொருள்களை எடுத்துச் செல்லவும், விற்பனை செய்யவும் எந்தவிதத் தடையும் கிடையாது. அதேபோல மீனவர்கள் தடையின்றி மீன்பிடிக்கச் செல்லலாம். ஆனால் அவர்கள் அந்த மீன்களைக் கொண்டு வந்து விற்கும் போது, சமூக இடைவெளியைக் கடைபிடித்து விற்க வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க எந்தத் தடையுமில்லை. தனியார் மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் திறந்து வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவம் பார்க்கத் தவறினால் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும்" என்று கூறினார்.