இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
குறிப்பாக, டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கரோனா நோயாளிகள் உயிரிழந்தது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் டெல்லியில் அமலில் உள்ள முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (25/04/2021) செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3- ஆம் தேதி அன்று அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
நாளை (26/04/2021) அதிகாலை 05.00 மணிக்கு முழு ஊரடங்கு முடிய இருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.