Skip to main content

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்