ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, கலால்துறை ஆணையர் கோபிகிருஷ்ணாவின் அலுவலகம் உள்பட 21 இடங்களில் ஓரிரு தினங்களுக்கு முன்பு சோதனை நடந்தது. "14 மணிநேரங்களுக்குள் நான் கைது செய்யப்படலாம்" என மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 800 கோடி ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாரதிய ஜனதா கொடுக்க முயலுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கட்சியைச் சேர்ந்த 62 எம்.எல்.ஏக்களில் 53 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சில நாட்களுக்கு முன் மணீஷ் சிசோடியாவின் மீது பொய் வழக்கு பதிந்து அவரை கைது செய்தது மேலும் அவரது இடங்களில் 12 மணிநேரங்கள் சிபிஐ ஆய்வுசெய்தது. ஆனால் அவர்கள் எந்த ஒரு ஆவணங்களையும் கைப்பற்றவில்லை" எனக் கூறிய அவர் மணீஷ் சிசோடியாவை கட்சியிலிருந்து விலகுமாறு பாரதிய ஜனதா வற்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
இது மட்டுமின்றி ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் 40 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 20 கோடி வழங்க பாஜக தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட பாரதிய ஜனதா கட்சியின் பேரத்தை ஏற்காதது மகிழ்ச்சி தருவதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க பணம் எங்கிருந்து கிடைத்தது என பொதுமக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என அவர் குற்றம் சாடியுள்ளார்.