பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஊதியம் அல்லது ஓய்வூதியத்தில் 50 சதவீதமாக வழங்கப்பட்ட அகவிலைப்படி, தற்போது, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024ஐ அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பால், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448.35 கோடி செலவாகும். இதன் மூலம், சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். விலைவாசி உயர்வை ஈடுகட்ட அரசு ஊழியர்களுக்கு, டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அவ்வப்போது திருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.