உலகில் ஆறாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ள கவுதம் அதானி எதிர்காலத்தில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி 9.15 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் ஆறாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். கடந்த மார்ச் 11- ஆம் தேதி 6.80 லட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்துக்கள், அடுத்த 33 நாட்களில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அதானி நிறுவனத்தில் கடந்த வாரம் ரூபாய் 15,000 கோடி முதலீடு செய்ததன் எதிரொலியாக, பங்கு மதிப்புகள் அதிகரித்ததே அதானியின் அதிவேக முன்னேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மூன்று மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், வாரன் பஃபெட் ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்வை விட அதானியின் சொத்து மதிப்பு உயர்வு அதிகமாகவே உள்ளது.
விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டக் கட்டமைப்புத் துறையிலும், எரிசக்தி துறையிலும் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் அதானி. குறிப்பாக, எதிர்காலத்தில் ஏற்றம்பெறும் எனக் கருதப்படும் பசுமை ஏரிசக்தி துறையில் அதானி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் காரணமாக, வரும் காலங்களிலும் அதானியின் சொத்து மதிப்பு மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றன.
தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 18.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சூழல் சரியாக அமைந்து இந்த வேகம் தொடர்ந்தால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி விரைவில் முதலிடத்தை கூட பிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.