கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு, எம்.டி.எஸ் நிறுவனத்திற்கும் நுண்ணலை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 560 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. முதலில் விண்ணப்பிப்பவருக்கே அலைக்கற்றை உரிமம் வழங்க வேண்டும் என்ற நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துவிட்ட நிலையில், அந்த முறையை பின்பற்றி ஜியோ நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டதால் 560 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மேலும் இதன்மூலம் இந்திய அரசுக்கு 69,000 கோடி இழப்பு எற்ப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தற்பொழுது விளக்கம் அளித்துள்ள மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், 'முறையான வழிகாட்டுதலின்படியே இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. உச்சநீதிமன்றம் 2ஜி அலைக்கற்றைக்கு தான், முதலில் விண்ணப்பிப்பவருக்கே அலைக்கற்றை உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பளித்தது. ஆனால் தற்பொழுது பாஜக ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படவில்லை, நுண்ணலை அலைக்கற்றை தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே உச்சநீதிமன்றத்தின் 2ஜி தீர்ப்பு இந்த விஷயத்தில் செல்லாது' என கூறியுள்ளார்.