புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் (16.02.2021) உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (18/02/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழிசை சௌவுந்தரராஜனுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததும், கடந்த 16 ஆம் தேதி மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்ததும் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ''ஆளுநர், முதல்வரின் அதிகாரம் பற்றி எனக்குத் தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்கானதாக இருக்கும். துணைநிலை ஆளுநராக இல்லாமல் துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். புதுவை முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொடுத்தப் புகார் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பேன்'' எனத் தெரிவித்தார்.