செல்ஃபோன் வெடித்ததில் மாணவர் படுகாயமடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளித்திருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கரோனா பாதிப்பு இருந்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புக்களை எடுக்கத் துவங்கினர். தற்போது இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டுவருகின்றன.
பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கள் நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஆன்லைன் வழியாக பாடத்தைக் கவனித்து வந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மாணவனின் செல்ஃபோன் வெடித்துச் சிதறியது. இதில் மாணவன் கன்னம், காது உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.