Skip to main content

துணை முதலமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

CBI raid at Deputy Chief Minister's house

 

டெல்லியில் 20- க்கும் அதிகமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை மேற்கொண்ட நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

 

இந்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரைச் செய்துள்ளார். புகாரின் பேரில் கலால் துறையில் 11 அதிகாரிகளையும் ஆளுநர் பணியிடை நீக்கம் செய்தார். 

 

டெல்லி மாநில அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஆளுநர் அனுமதி அளிக்காததையடுத்து, புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டு, டெல்லியில் 468 தனியார் மதுபானக் கடைகள் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதியுடன் மூடப்பட்டன. இந்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

 

இந்த சோதனைகளால் ஆம் ஆத்மி பயப்படாது என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  

 

இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் உண்மை முகம்  வெளிவந்து விட்டதாக விமர்சித்துள்ளார். 

 

இதற்கிடையே, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. முதல் குற்றவாளியாக மணீஷ் சிசோடியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

முறைகேடு புகாரில் சுமார் 15 மணி நேரம் நீடித்த சோதனையைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவின் வீட்டில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சோதனையில் செல்போன், கணினி, ஆவணங்கள்  உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்