காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் நேற்று (12.09.2023) நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு உத்தரவிட்ட நான்கு நாட்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் கன அடி நீர் திறந்து விட்டது. அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதைக் கர்நாடகா அரசு குறைத்துவிட்டது. அதன்பிறகு வினாடிக்கு 4,000லிருந்து 3,000 கன அடி நீர் தான் திறந்து விடப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் குறுவை நெற்பயிர்கள் சாகுபடிக்காகக் காத்திருக்கிறது. உடனடியாக தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதேபோல் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது எனப் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்த்தரப்பான கர்நாடக அரசு அதிகாரிகள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியாது எனப் பல்வேறு கணக்குகளைக் காட்டினர். இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். விரைவில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் சிறப்பு அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் நண்பகல் 12.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.