தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை காலை டெல்லி செல்கிறது. டெல்லியில் நாளை மாலை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜெந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கும் இக்குழுவினர் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள் பட்டியலில், திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை, சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன், சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.