இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளைக் கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். இந்த நிலையில், சட்டவிரோதமாக மின்கம்பத்திலிருந்து மின்சாரம் திருடியதாகக் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான குமாரசாமியின் வீடு பெங்களூரில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அந்த வீடு மின் அலங்காரத்தால் ஜொலித்தது. இந்த மின்சாரம், அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமாகத் திருடியுள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவை காங்கிரஸின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், ‘உலகின் ஒரே நேர்மையான மனிதர் குமாரசாமியின் ஜேபி நகர் வீடு, மின்கம்பத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட மின்சாரத்தால் அலங்கார விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் திருடும் அளவுக்கு முன்னாள் முதல்வருக்கு வறுமை ஏற்பட்டது சோகம்தான்’ என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி பெங்களூர் மின்சார விநியோக நிறுவனத்திடம் புகார் அளித்தது. அந்தப் புகாரின் பேரில் மின்சார விநியோக நிறுவனம், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘தனியார் அலங்கார விளக்கு ஒப்பந்தக்காரர், எனது வீட்டிலிருந்து மின்சார இணைப்பு கொடுக்காமல், பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்திலிருந்து இணைப்பைக் கொடுத்துவிட்டார். இந்த விவகாரம் எனக்குத் தெரியவந்ததும், அந்த மின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்லிவிட்டேன். இந்த கவனக் குறைவுக்கு நான் வருந்துகிறேன். மின் விநியோக அதிகாரிகள் எனது வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து, நோட்டீஸ் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதற்கு உரிய அபராதத்தையும் செலுத்தி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.