கேரளாவில் கரோனா வைரஸை தடுப்பதில் அரசு வேகம் காட்டி வருகிறது. அதே போல் பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும் கரோனா தடுப்பு விழிப்புணா்வுகளில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு மாஸ்க் சப்ளை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் கோழிக்கோடு மைசூா் செல்லும் அரசு பேருந்தில் கொடுவள்ளியில் இருந்து ஏறிய இளைஞா் ஓருவா் பஸ்சின் நடுவில் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தார். அடுத்த பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏறிய ஒருவா் அந்த இளைஞா் இருந்த இருக்கையில் உட்கார வந்தார். அப்போது அந்த இளைஞா் எனக்கு கரோனா இருக்கிறது என்றதும், அவா் அலறியடித்து கொண்டு பஸ்சின் பின் சீட்டிற்கு சென்றுவிட்டார். இப்படி உட்கார வந்த இரண்டு பேரிடமும் சொன்னதால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
உடனே பஸ் ஓட்டுனரும் நடத்துனரும் பஸ்சை நிறுத்தி தூரத்தில் நின்ற படி கரோனா குறித்து அந்த இளைஞனிடம் கேட்டனா். அதற்கு அவா் உண்மை தான் எனக்கு கரோனா இருக்கிறது. நான் சிகிச்சை எடுக்காமல் இருக்கிறேன் என்றார். அதற்குள் பஸ்சில் இருந்த பயணிகள் எல்லாம் இறங்கி ஓடி விட்டனா். நடத்துனரும் ஒட்டுனரும் பஸ்சுக்குள் ஏறாமல் வெளியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தாமரசேரி போலீஸாரிடம் ஓட்டுனரும் நடத்துனரும் கூறியுள்ளனர். போலீஸார் பஸ்சில் ஏறாமல் வெளியே நின்ற படி அந்த இளைஞரிடம் கேட்டனா். அதற்கு அந்த இளைஞா் என் அருகில் வந்து கேளுங்கள் சொல்கிறேன் என கூறினார். பின்னா் போலீஸார் மருத்துவ துறைக்கு தகவல் சொல்லி மருத்துவ குழுவினா் அங்கு வந்தனா். அவா்கள் அந்த இளைஞரை பஸ்சோடு தாமரசேரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அந்த இளைஞரை பரிசோதனை செய்த போது அவருக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என உறுதியானது. பின்னர் எதற்காக பொய் கூறினீர்கள் என்று அந்த இளைஞனிடம் கேட்டதற்கு, "கரோனா அச்சத்தில் பஸ் சீட்டில் இன்னொருத்தரோடு சோ்ந்து இருக்க வேண்டாம். அதே போல் இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் அந்த பஸ்சில் பயணிகள் யாருக்கும் மாஸ்க் கொடுக்கபடவில்லை இதனால் தான் இப்படி நடந்து கொண்டேன்" என தெரிவித்தார். மருத்துவா்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞரை போலீஸார் மூலம் எச்சரித்து அனுப்பினார்கள்.