![raghuram rajan](http://image.nakkheeran.in/cdn/farfuture/tkRMWi92mEUJRdNi_2R80IXZXVpm1_eYE1JjI6ip2q4/1621238985/sites/default/files/inline-images/e%20%283%29.jpg)
இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன், தற்போது சிகாகோ பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இந்தநிலையில், டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழத்தின் கல்வி மையம், காணொளி கருத்தரங்கில் பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் இந்தக் கரோனா பெருந்தொற்று என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கு தற்போது, சிறுகுறு தொழில்களுக்கான கடனை தள்ளுபடி செய்யும் நடைமுறை தேவை என கூறியுள்ளார்.
மேலும், ரகுராம் ராஜன் இதுகுறித்து, "கரோனா பெருந்தொற்று முதலில் தாக்கியபோது, ஊரடங்கின் காரணமாக சவால் என்பது பொருளாதார ரீதியில் இருந்தது. இப்போது சவால் என்பது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி தனிப்பட்ட ரீதியிலும் இருக்கும். மேலும், நாம் முன்செல்ல செல்ல அதற்கு ஒரு சமூக பங்கும் இருக்கும்" என கூறினார்.
தொடர்ந்து அவர், "தொற்றுநோயின் விளைவுகளில் ஒன்றாக, பல்வேறு காரணங்களால் அரசாங்கத்தின் இருப்பைக் காணமுடியவில்லை" என தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ரா அரசு கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் வழங்கியதைக் குறிப்பிட்ட அவர், பல்வேறு இடங்களில் அரசாங்கம் அந்த அளவிற்கு செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்த பெருந்தொற்று முடிந்த பிறகு, அரசாங்கம் எங்கெங்கு செயல்படவில்லை என்பதை நாம் கண்டறிவோம் என நம்புகிறேன். இந்தப் பெருந்தொற்று நாம் அனைவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. எந்தவொரு ஆணும், பெண்ணும் தனித்துவிடப்படவில்லை" என கூறியுள்ளார்.