கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.
இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் ஒரு குறிப்பிட்ட வகை ஆடையை (காவி ஆடையை) அணிய விரும்புவதால், தன்னால் அதிகாரிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்
ஹிஜாப் விவகாரத்தைக் குறிப்பிடும் விதமாகப் பேசிய அவர் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு நபரும் அவர்கள் விரும்பியதை அணியச் சுதந்திரம் உள்ளது. ஆனால் பொது இடங்கள், சந்தைகள் மற்றும் வீடுகளோடு அந்த சுதந்திரம் முடிவுக்கு வந்துவிடும். நான் ஒரு குறிப்பிட்ட வகையான உடையை அணிய விரும்புகிறேன் என்பதால், எனது அதிகாரிகள் மீது என்னால் ஆடைக்கட்டுப்பாட்டை விதிக்க முடியாது.
எனினும், ஒவ்வொரு அமைப்பும் ஒரே மாதிரியான ஆடை கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரு போலீஸ்காரர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர், அந்த மதத்திற்கு ஏற்றவாறு உடை அணிவார் என்றால், அந்த அமைப்பு குழப்பத்திற்கு உள்ளாகும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.