நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத், சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.