இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வருகிறது. பொதுவாக நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பவர்களை தாக்கும் இந்த நோய், கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் தாக்கி வருகிறது. இதனால் உயிரழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
மஹாராஷ்டிராவில் மட்டும் 52 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில் கருப்பு பூஞ்சை குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கமளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கருப்பு பூஞ்சை ஒன்று புதிய நோயல்ல. ஆனால் தற்போது கரோனா பாதிப்பால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர், "கருப்பு பூஞ்சை முகம், மூக்கு, கண் அல்லது மூளை ஆகியவற்றைப் பாதிக்கும். இது பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தும். நுரையீரலுக்கும் இது பரவும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிக முக்கியம். பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்ற கூடுதல் தொற்றுகள் தான் உயிரிழப்பை அதிகப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் எம்.டி. டாக்டர் சுரேஷ்குமார் கருப்பு பூஞ்சை குறித்து கூறுகையில், "ஸ்டீராய்டு பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். 90 க்கு மேல் ஆக்சிஜன் அளவைக் கொண்ட நோயாளிக்கு ஸ்டீராய்டு வழங்கப்பட்டால், பக்க விளைவாக கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்திலேயே கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டறிவது முக்கியமானதாகும். முகத்தில் சி.டி ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்காலம். ஆம்போடெரிசின் என்ற மருந்தை இதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு அல்லது தவறான பயன்பாடு கருப்பு பூஞ்சை நோய்க்கு வழிவகுக்கிறது" என தெரிவித்துள்ளார்.