Published on 05/05/2020 | Edited on 05/05/2020
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களால் தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. புதுச்சேரியிலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் 160 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று வந்துள்ளது.
நேற்று முதல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கரோனா வைரஸை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தளர்வு விதிக்கப்பட்டதிலிருந்து மக்கள் சமூக விலகலை மதிக்காமல் நகரில் கூட்டம் கூட்டமாக செல்வது வேதனைக்குரியதாக உள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வணிகர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளனர். கடைகளின் நேரத்தை மாற்றி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் நடமாட்டத்தை கவனித்த பின், அதனை தொடர்ந்து கொடுத்துள்ள தளர்வுகளில் எவற்றிற்கு மீண்டும் தடைவிதிப்பது என்பதை அரசு முடிவு எடுக்கும்.
கடலூர், திண்டிவனம், விழுப்புரம் எல்லை பகுதிகளில் அதிகளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளோம். தொழிற்சாலைகளில் வெளிமாநில மக்கள் வேலை செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருத்துவ தேவைகள் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்” என கூறியுள்ளார்.
இதனிடையே “தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்க உள்ளதால் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான முடிவை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.