மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் மீது உள்ள வழக்குகள் குறித்த விபரங்களை தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின், தங்களின் குற்றப்பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். இந்த விளம்பரங்களை பார்த்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எளிதில் முடிவு செய்ய உதவியாக இருக்கும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதை அடிப்படையாக வைத்துத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி இதனை உத்தரவாக பிறப்பித்தது. அந்த உத்தரவு மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் இதனை பின்பற்றி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும்.
மேலும் விளம்பரங்கள் வெளியிட்டதற்காக ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனை பின்பற்றாத வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.