காவல்நிலையத்தில் கொடுத்த பாலியல் புகாரை திரும்பப்பெற கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரின் குடும்பம் பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி, தீவைத்து கொன்ற கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள ஜஹாங்கிராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம், அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து அச்சிறுமியின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காவல்நிலையத்தில் கொடுத்த பாலியல் புகாரை திரும்பப்பெற கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரின் குடும்பத்தார், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
இந்த சூழலில், செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில், பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேகத்திற்கிடமான வகையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, அச்சிறுமியின் வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரிக்கையில், சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு நெருக்கமானவர்கள் ஏழு பேர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை தீயிட்டு கொளுத்தியதாக கூறியுள்ளார். சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இன்று அதேபோல மற்றொரு சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.