புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி உள்பட 3 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவின் திரால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கண்டறியப்பட்ட வீட்டை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி முத்சார் அகமது கான் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கியமா ஒருவர் கொல்லப்பட்டிருப்பதால், பதில் தாக்குதல் நடக்கலாம் என கருதி நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு மத்திய அரசு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
அதன்படி சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருவோர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.