இந்திய நாடளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்று (07.12.2021) காலை பாஜகவின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திற்கு வராதது குறித்து பாஜக எம்.பி.க்களை எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக எம்.பிக்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது, “கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். நாடாளுமன்றப் பணிகளில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். குழந்தைகளுக்குச் சொல்வது போல் ஒரே விஷயத்தை உங்களுக்குத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பது சரியான விஷயமல்ல. உங்கள் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். இல்லையென்றால் மாற்றம் நிகழும். இதைத் திரும்பத் திரும்ப சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை என பிரதமர் தெரிவித்தார்.
எம்.பி.க்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதியில் மக்களை சென்றடைய நிகழ்ச்சிகளை நடத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பத்ம விருதுகளைப் பெற்றவர்களை நாம் பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பிரதமர் கூறினார். ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சூரிய நமஸ்காரத்தையும், யோகாவையும் செய்யுமாறு மோடி அறிவுறுத்தினார்.”
இவ்வாறு கூட்டத்தில் கலந்துகொண்ட சில எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.