உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. போப்டேவின் பதவி காலம் ஏப்ரல் 23-ந் தேதியோடு நிறைவு பெறுகிறது. சுமார் 17 மாதங்கள் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார் போப்டே!
அவரது பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடந்த வாரம் ஆலோசித்திருந்தது. போப்டேவிடமும் இது குறித்த பரிந்துரையை எதிர்பார்த்தது சட்ட அமைச்சகம்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளாக என்.வி. ரமணா, ரோஹிண்டன் நாரிமன், யு.லலித், கன்வில்கர் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களில் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை நியமிக்கலாம் என சமீபத்தில் பரிந்துரை செய்திருக்கிறார் போப்டே. இதனைத் தொடர்ந்து ரமணாவின் சர்வீஸ் ரெக்கார்டுகள் ஆராயப்பட்டன.
போப்டேவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா, 2014 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். வருகிற 24-ந் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ரமணா, 2022 ஆகஸ்ட் மாதம் வரை பதவியில் இருப்பார் என்கிறது நீதித்துறை வட்டாரம்.