காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், அயோத்தி நில வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எழுதிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் சல்மான் குர்ஷித், இந்துத்துவாவை ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களோடு ஒப்பிட்டிருந்தார்.
இதற்குப் பாஜகவிடமிருந்தும், வலதுசாரிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்தொடர்ச்சியாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே இந்து - இந்துத்துவா குறித்து வார்த்தை போர் மூண்டது.
இந்தச் சூழலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டை சிலர் சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். இதுதொடர்பான படங்களையும், வீடியோக்களையும் சல்மான் குர்ஷித் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சல்மான் குர்ஷித் வீட்டின் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறியுள்ளது.