புதுச்சேரியில் ஏற்கனவே ஏராளமான மதுபானக் கடைகள், மது சூதாட்ட விடுதிகள் உள்ள நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசானது தற்போது மேலும் ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே தனியார் மூலம் ரெஸ்ட்ரோ பார் (மதுபான சூதாட்ட நடனக் கூடம்) திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தியால்பேட்டையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெஸ்ட்ரோ பார் வரும் பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக வந்து கிழக்கு கடற்கரைச் சாலை முத்தியால்பேட்டை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பினார்கள். ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேது.செல்வம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் , “வருமானம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடைகளுக்கும், நடனத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது” எனக் கடும் கண்டனம் தெரிவித்தனர். “உடனடியாக அரசு இந்த மதுபான சூதாட்ட நடன பாரை மூடவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.