ஹரியானாவில் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்க்காத வெற்றியை பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் சற்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. மிக பெரிய வெற்றி பெறுவோம் என்று மார்தட்டிய பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தோல்வி அடையும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சி, அக்கட்சியினரே எதிர்பார்க்காத வகையில் 30 இடங்களில் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. மெஜாரிட்டி யாருக்கும் கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் கூட்டணி கட்சியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அக்கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஹரியானாவில் பாஜகவின் ஆட்சி கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட், மராட்டியத்தில் கையை சுட்டுக்கொண்ட அதிர்ச்சியில் இருக்கும் பாஜகவுக்கு இந்த செய்தி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.