பஞ்சாப் மாநில காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். மேலும், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது முதல், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துவந்தார்.
இந்தநிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைக்க 110 சதவீதம் திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்தார். இந்தநிலையில் அவர், கூட்டணி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும், வரும் சனிக்கிழமை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அமரீந்தர் சிங், "இன்றைய நிலவரப்படி, எங்கள் சொந்த கருத்து என்னவென்றால், பாஜகவை நோக்கி காற்று வீசுகிறது. பல இந்துக்கள் பாஜகவையும் எனது கட்சியையும் ஆதரிக்கின்றனர். பஞ்சாபில் 36% இந்துக்கள் உள்ளனர். காங்கிரஸைவிட அவர்களிடமிருந்து நாங்கள் அதிக ஆதரவைப் பெறப் போகிறோம். விவசாயிகளிடமிருந்தும் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.