தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், கடந்த 2ஆம் தேதி வெளியானது. இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. அதேநேரத்தில், தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அங்கு வன்முறையும் வெடித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநரிடம் கேட்டறிந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகமும், வன்முறை குறித்து மேற்கு வங்க ஆளுநரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வன்முறைக்கு பாஜகவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தேர்தலுக்குப் பிறகான வன்முறையில் இதுவரை 16 பேர் இறந்துள்ளதாகவும், அதில் பாதி பேர் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களென்றும், பாதி பேர் பாஜகவையும், ஒருவர் சஞ்சுக்தா மோர்ச்சாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எந்தவிதப் பாரபட்சமுமின்றி 2 லட்சம் இழப்பீடு தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், மேற்குவங்க பாஜக தனது சமூகவலைதளப் பக்கத்தில், மேற்குவங்கத்தில் நடைபெறும் கலவரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையில் இறந்தவர்கள் என ஒன்பது பேரின் புகைப்படம் பெயரோடு இடம்பெற்றிருந்தது. அதில், ஒருவர் மோனிக் மொய்ட்ரோ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மோனிக் மொய்ட்ரோ என்ற பெயரில் இறந்ததாகக் கூறப்பட்டவர், "இந்தியா டுடே" ஊடகத்தில் பணிபுரியும் அப்ரோ பானர்ஜி என்பவருடையதாகும்.
I am Abhro Banerjee, living and hale and hearty and around 1,300 km away from Sitalkuchi. BJP IT Cell is now claiming I am Manik Moitra and died in Sitalkuchi. Please don't believe these fake posts and please don't worry. I repeat: I am (still) alivehttps://t.co/y4jKsfx8tI pic.twitter.com/P2cXJFP5KO
— Abhro Banerjee (@AbhroBanerjee1) May 6, 2021
தான் இறந்ததாகப் பரவிய வீடியோவைக் கண்டு அதிர்ந்த அவர், தான் உயிரோடு இருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்ததோடு, அந்தப் பதிவை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசிய அவர், "நான் இன்று காலை சற்று தாமதமாகத்தான் எழுந்தேன். எழுந்ததும் 100 க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பார்த்தேன். என்ன நடந்தது என விசாரிக்கும் முன்பே எனது நண்பர் அரவிந்த், பி.ஜே.பி ஐ.டி செல், சிதல்குச்சி வன்முறையில் இறந்துவிட்டதாகக் கூறப்படும் மானிக் மொய்ட்ரோவின் படத்திற்குப் பதிலாக எனது படத்தைப் பரப்புவதாகக் கூறினார். நான் சிதல்குச்சியில் இருந்து 1,400 மீட்டர் தொலைவில் உள்ளேன். இதுபோன்ற தவறான செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து பாஜக அந்த விடீயோவை நீக்கியுள்ளது. மேலும் அப்ரோ பானர்ஜியின் ஒரு கட்டுரையை, ஆதாரமாகப் பயன்படுத்துகையில் அவரது புகைப்படம் வீடியோவில் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கமளித்துள்ளது.